Tuesday, 2 December 2008

இலங்கை : தமிழர்களின் தனி உரிமை


ஸ்ரீதுங்கா ஜெயசூரியா,இலங்கை ஐக்கிய சோசலிசக் கட்சி (CWI SRI LANKA)

ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை சிங்கள அரசு நடத்திக்கொண்டிருக்கும் போரில் அது வெற்றி பெற வேண்டும் என்பதில் வெறி கொண்டிருக்கிறது.

“இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே போரை உடனடியாக நிறுத்தி தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்”, என்று அறைகூவல் விடுத்தார் ஸ்ரீதுங்கா ஜெயசூரியா.

இலங்கை ஐக்கிய சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளரான ஸ்ரீதுங்கா கடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டாலும் அத்தேர்தலில் மகிந்தா ராஜபக்சே மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரை அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

தமிழர்கள் தனி நாடு கோருவதற்கு உரிமை உண்டு என்பது ஐக்கிய சோசலிசக் கட்சியின் நிலை என்று கூறி அவர் தனது கருத்துகளை முன்வைத்தார்.

தமிழர்களின் தனி உரிமை

இலங்கை அரசியலில் (தமிழ்) இனப் பிரச்னையைப் பேசாமல் அரசியல் பேச முடியாது. கடந்த அதிபர் தேர்தல் கொள்கை அறிக்கையில் சோசலிசக் கட்சி தமிழர்களின் கோரிக்கை பற்றி அதன் நிலையைத் தெளிவாக கூறியிருந்தது.

தமிழ் பேசும் மக்களின் சுயநிருணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று சோசலிசக் கட்சி பரிந்துரைத்தது (We advocated the acceptance of the Tamil speaking peoples’ right to self-determination). சோசலிசக் கட்சியின் தெளிவான இந்நிலை அதன் தேர்தல் துண்டறிக்கைகளில் கூறப்பட்டிருந்தது.

தமிழர்களின் உரிமையை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பது பற்றி கட்சிக்கு சில கருத்துகள் உண்டு. அவற்றை மேசையைச் சுற்றி அமர்ந்து பேச வேண்டும். அதைவிடுத்து வேறு எந்தப் போக்கும் தமிழ் இனத்திற்கு எதிரான நோக்கமுடையதாகும். ஏனென்றால் தமிழர்கள் இந்நாட்டில் வாழ்கின்றவர்கள். அவர்கள் இலங்கையின் ஓர் அங்கமாவர். அவர்கள் வெளிநாட்டினர் அல்லர்.

சோசலிசத் தத்துவப்படி ஒரு நாட்டிலுள்ள அனைத்து இனங்களும் அவர்களுடையப் பிரச்னைகளை விவாதங்களின் வழி தீர்த்து ஒன்றாக வாழ வேண்டும். அது சாத்தியமில்லை என்று கருதும் இனம் பிரிந்து செல்லலாம். அதன் அந்த உரிமை தற்காக்கப்படும்.

பெரும்பான்மையான சிங்கள இன மக்களுடன் சேந்து வாழ்வதா இல்லையா என்பதை தமிழ் இன மக்கள் முடிவு செய்ய வேண்டும். சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை என்றால், தனிப்பட்ட நாட்டில் வாழும் உரிமை தமிழர்களுக்கு உண்டு.

தமிழர்கள் தனி நாடு வேண்டும் என்று தீர்மானித்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும் என்ற செயல் திட்டத்தை ஐக்கிய சோசலிசக் கட்சி கொண்டுள்ளது (Our programme said that if the Tamils decide to have a separate state, we would support that.).

நம்பிகைத் துரோகம்

ஐக்கிய சோசலிசக் கட்சி கூறுவதை தமிழர்கள் அவ்வளவு சுலபமாக நம்பப் போவதில்லை.

ஏனென்றால், சிங்கள அரசாங்கங்கள் மற்றும் சிங்கள உயர்மட்ட தலைவர்கள் வாக்குறுதிகள் அளிப்பதும் அவற்றை நிறைவேற்றாமல் இருப்பதும் ஒரு பாரம்பரியமாகவும் கொள்கையாகவும் இருந்து வந்துள்ளன.

இலங்கையை ஆண்டுவரும் முதலாளித்துவத்தினர் தமிழர்களுக்கு துரோகமிழைத்து வந்துள்ளனர். ஆரம்பத்தில், பழைய இடச்சாரியினர் (பழைய கம்யூனிஸ்ட் கட்சியினர்) தமிழர்களின் சுய நிருணயம் விசயத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கவில்லை, ஆனால் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை ஆதரித்தனர்.

ஆனால், 1971 ஆம் ஆண்டில் சோசலிசக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் இலங்கையின் முதலாளித்துவ அரசுடன் கூட்டு சேர்ந்தன. புதிய அரசமைப்புச் சட்டம் வரைவதற்கு ஒப்புக்கொண்டன. பிரதமர் பண்டாராநாயகி புத்த மதத்தை நாட்டின் அதிகாரத்துவ மதமாக்கினார். இது எவ்வகையான துரோகம்!

இதற்குமுன், பெரும்பான்மையாக இல்லாவிட்டலும் பெருமளவிலான தமிழ் மக்கள் இடதுசாரி கட்சிகள் மாற்றாக இருப்பதை விரும்பினர்; இடதுசாரி கட்சிகளை ஆதரித்தனர்; சோசலிச தத்துவங்களை ஆதரித்தனர்.

ஆனால் இடதுசாரி கட்சிகள் பிரதமர் பண்டாரநாயகியுடன் இணைந்து தங்களின் சுய அடையாளத்தைக் காட்டியபின் நிலைமையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது.

இலங்கையின் இடதுசாரி கட்சிகள் அன்று இழைத்த துரோகம்தான் இன்றைய பேரழிவுக்குக் காரணம். ஏனென்றால் இதற்குமுன் ஆயுதப் போராட்ட இயக்கம் இருந்ததில்லை.

ஜி ஜி. பொன்னம்பலம், அருணாசலம் செல்வநாயகம் அல்லது அமிர்தலிங்கம் ஆகியோர் கொழும்பிற்கு வந்து அவர்களின் மொழிக்கு சம உரிமை கோரி அமைதிப் பேரணிகளும் மறியல்களும் நடத்தியுள்ளனர், ஆனால் தனி நாடு கேட்கவில்லை.

அவர்கள் மொழிக்கு சம உரிமை கோரினர். அவர்களுக்கு அது கிடைக்கவில்லை. அதை கொடுப்பதற்கு பதிலாக அவர்கள் பலிவாங்கப்பட்டனர், தாக்கப்பட்டனர்.

இடதுசாரியினர் இழத்த துரோகம் மற்றும் அமிர்தலிங்கம், செல்வநாயகம், ஜி ஜி. பொன்னம்பலம் போன்றோரின் தோல்விகள் தமிழர்களை வேறுவழியின்றி ஆயுதம் ஏந்தச் செய்தது.

இக்காலக்கட்டத்தில் வடக்கில் தமிழ் இளைஞர்கள் மட்டும் ஆயுதம் ஏந்தவில்லை. தெற்கிலும் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கினர். இடதுசாரிகள் இழைத்த துரோகத்தினால் நம்பிக்கை இழந்துவிட்ட ஜெவிபி (JVP) ஆதரவு இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கினர்.

இலங்கையில் தொழிலாளர் இயக்கத்திற்கு நீண்டகால இடதுசாரி பாரம்பரியம் உண்டு. இது 1940 களின் நிலமை. அப்போது இலங்கையின் வாழக்கைத் தரம் மலேசியாவைவிட உயர்வானதாக இருந்தது.

துரதிஷ்டவசமாக இடதுசாரிகள் இனவாத அரசியலில் - முதலாளித்துவ இனவாத அரசியலில் - இணைந்ததால், (இது இந்தோனேசியாவில் நடந்திருக்கிறது. இப்போது இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்துள்ளன.) தொழிலாளர் இயக்கம் பலவீனமடைந்தது. இது இரு ஆயுதமேந்திய அமைப்புகள் - எல்டிடிஇ மற்றும் ஜெவிபி - தோன்றுவதற்கு வழிவகுத்தது.

ஒரு கட்டத்தில் ஜெவிபி எல்டிடிஇயைவிட பலமிக்கதாக இருந்தது. ஆனால் எல்டிடிஇ பின்னர் முன்னிலையடைந்தது.

சிங்கள அரசு எல்டிடிஇயை தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டிருந்தது. அதற்குப் பல பின்னணிகள் உண்டு. ஒரு சோசலிச அல்லது மார்க்சிசவாதி என்ற முறையில் எல்டிடிஇயை அரசியல் அடிப்படையில் ஆதரித்தது கிடையாது. மக்கள் உரிமையை ஆதரிக்கிறோம். மக்கள் போராட்டத்தில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.

மனித உரிமைப் போராட்டங்கள் உலகின் பல பாகங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. மத்தியக்கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகள் போன்றவற்றில் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இலங்கையில் நடந்து கொண்டிருப்பதும் மனித உரிமைப் போராட்டம்தான். ஆனால், உலக அரங்கில் இலங்கைத் தமிழர்களின் போராட்டம் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.

இதற்குக் காரணம் எல்டிடிஇ இழைத்த பல தவறுகள். அவற்றில் அப்பாவி மக்களையும் தெற்கில் சிங்களவர்களையும் கொன்றது. கடந்த 20 ஆண்டுகளில் சிங்கள அரசு தமிழர்களை கொன்றுள்ளது, தமிழ் இனத்தை அழிப்பதில் இறங்கியுள்ளது. அதற்காக நாமும் கொல்ல வேண்டும் என்பதில்லை.

எல்டிடிஇ அதன் நம்பகத்தன்மையை தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் இழந்துள்ளது. அதன் பலனை இன்றும் அனுபவித்து வருகிறது.

இன்னொரு காரணம்: அனைத்துலக நெருக்குதல் காரணமாக இலங்கை அரசு கடந்த பல ஆண்டுகளில் பல்வேறு முன்மொழிதல்களை அறிவித்தது. ஆனால், எதுவுமே பலன்தரவில்லை.

இரு தரப்பிலிருந்தும் உருப்படியான, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலான திட்டங்கள் முன்வராததால் உலகச் சமூகம் அலுத்துப்போய்விட்டது.

முன்பு அமெரிக்கா, யூரோப்பியன் யூனியன், ஜப்பான் போன்ற நாடுகள் அளித்த ஆதரவை பின்னர் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளன. இந்த பேராதிக்க நாடுகள் தங்களுக்கென்ற திட்டங்களைக் கொண்டுள்ளன. அந்நாடுகள் இலங்கை விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்குக் காரணம் அங்குள்ள தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதல்ல. இலங்கையில் உலகலாயமயக் கொள்கையை செயல்படுத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. அச்சிரமங்களை அகற்றி தங்களின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அங்கு அமைதி தேவைப்படுகிறது. அதுதான் அவர்களின் திட்டம்.

இலங்கை சிறிய பொருளாதாரத்தைக்கொண்ட ஒரு சிறிய நாடு. ஆனால், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவிற்கு இலங்கைப் பிரச்னை ஒரு பெரும் பிரச்னை.

இலங்கைத் தமிழர்கள் தனிப்பட்ட ஈழ நாட்டை உருவாக்கினால் அது தமிழ் நாட்டில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும். தமிழ் நாட்டில் மட்டுமல்ல தென்நாடு முழுவதிலும் - கேரளா, கன்னடா, ஆந்திரப் பிரதேசம் - அதன் தாக்கத்தை உணர முடியும்.

தென் இந்தியத் தமிழர்கள் இலங்கைப் பிரச்னையில் இந்தியா தலையிட வேண்டும் என்று விரும்புகின்றனர். இலங்கையிலுள்ள தங்களின் உடன்பிறப்புகளின் உயிரைக் காப்பாற்றக் கோரி தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் அவர்கள் நெருக்குதல் அளிக்கின்றனர்.

ஏதாகிலும் செய்ய வேண்டும் என்ற சாதாரணத் தமிழ் மக்களின் வற்புறுத்தல் காரணமாக கருணாநிதி நன்கொடை வசூலிக்கிறார், மன்மோகன் சிங் இலங்கைத் தூதரை அழைத்து எச்சரிக்கை விடுகிறார். இவற்றை தொலைக்காட்சியில் காண்கின்றோம்.

இவை அனைத்தும் நாடகம், அரசியல் நாடகம். ஓரு பக்கம் இந்த நாடகம். இன்னொரு பக்கம் இந்திய அரசாங்கம் மிக நவீன இராணுவத் தளவாடங்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது. இது இரட்டை வேடம்.

சோசலிசவாதி என்ற முறையில் இதனைப் புரிந்துகொள்ள முடிகிறது. இது அமெரிக்க அதிபர் புஷ்சின் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற கொள்கையைப் பின்பற்றுவதாகும். இது ஒரு பெரிய மூடிமறைப்பு வேலையாகும்.

இக்கொள்கையின்கீழ் சுதந்திரத்திற்காகப் போரிடும் எவரும் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்படுவர்.

பாக்கிஸ்த்தான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மறைமுகமாக இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளை ஆதரிக்கின்றன. அமெரிக்கா நேரடியாகவே இராணுவத் தளவாடங்கள், சிறப்பு படகுகள் மற்றும் நீர்மூழ்கிகளை வழங்குகிறது.

தமிழர்களைத் தீர்த்துக்கட்டுவதற்கான சிங்கள அரசின் திட்டம் நிறைவேற்றப்படுவதற்காக இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன.

வெளிநாட்டவர்களின் உதவி

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் எல்டிடிஇனரும் உண்மையானப் பிரச்னையைப் புரிந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் மற்றும் எல்டிடிஇனரின் தவறு இதுதான்: ஐக்கிய நாட்டு மன்றம், பிரிட்டிஷ், பிரன்ச், ஜெர்மன், சுவீடன், நோர்வீஜியன் அல்லது இந்திய அரசாங்கங்களின் ஆதரவை அவர்கள் நாடுகிறார்கள். அவர்கள் ஏன் இவர்களின் இலட்சியத்திற்கு உதவ வேண்டும்? அவர்கள் எந்தப் போராட்டத்தையும் ஆதரிப்பதில்லை.

இலங்கைத் தமிழர்களின் போராட்டத்திற்கு அவர்கள் இப்புவியிலுள்ள சாதாரண மக்களின் ஆதரவைக் கோர வேண்டும். இது வெறும் தமிழர்கள் பிரச்னை அல்ல. இது மனித இனத்தின் பிரச்னை, அனைத்து மக்களும் ஒன்று சேர வேண்டும்.

இது ஜெயலலிதா அல்லது கருணாநிதியின் தனிப்பட்ட விவகாரமல்ல.

முதலில், அனைத்து இந்திய மக்களின் ஆதரவுக்கு கோரிக்கை விடப்பட வேண்டும். தென் ஆசிய மக்களின் ஆதரவைக் கோர வேண்டும். வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மேல்நாட்டு தொழிலாளர்களின் ஆதரவைக் கோர வேண்டும். இவ்வாறான கோரிக்கைகள் வெளிநாட்டு தூதரகங்களிடம் வழங்கும் மனுக்களைவிட மிகச் சக்தி வாய்ந்தவைகளாக இருக்கும்.

தோசை வடைக்கு தமிழர்கள் தயாராக இல்லை

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு தலைமுறை இளைஞர்கள், ஆண்களும் பெண்களும், உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.

எத்தனைப் பெண்கள் அவர்களுடைய தகப்பனார்களின்முன் கற்பழிக்கப்பட்டுள்ளனர். எத்தனைத் தாய்மார்கள் அவர்களின் மகன்கள் மற்றும் மகள்கள்முன் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஓராண்டிற்குமுன் 600,000 தமிழர்கள் இருந்தனர். இப்போது எண்ணிக்கை 200,000 க்கு குறைந்துள்ளது.

சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அந்த இடத்தில் போதுமான உணவும் இதர வசதிகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து நடந்து வரும் போரால் தமிழ் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகிவருகின்றனர்.

சிங்கள அரசாங்கம் போரில் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதாக கூறிக்கொள்கிறது. அது அவ்வளவு சுலபமானதல்ல. மூன்று மாதங்களுக்குமுன் கிளிநொச்சியிலிருந்து 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வந்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் கூறியது.

இந்நேரம் கிளிநொச்சியைப் பிடித்திருக்க வேண்டும். அது இன்னும் நடக்கவில்லை. இது எதைக் காட்டுகிறது? அது அவ்வளவு சுலபமானதல்ல என்பதைக் காட்டுகிறது.

எல்டிடிஇயை அழிப்பதற்கு இலங்கை அரசாங்கம் அவர்களை எல்லாம் கொல்ல வேண்டும் - 20,000 லிருந்து 40,000 பேர்கள் வரையில். இதற்கு என்ன விலை கொடுக்க வேண்டியிருக்கும்? உலக மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்களா? வேறுவழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டால் கிழக்கிலும் வடக்கிலுமுள்ள தமிழர்கள் தமிழ் நாட்டின் உதவியை நாடுவர். இராணுவத் தீர்வு தீர்வாக இருக்க முடியாது. இது நாட்டின் பிரிவினைக்கு இட்டுச் செல்லும்.

நாட்டை ஒருமைப்படுத்தப் போகிறோம் என்று இலங்கை இராணுவம் கூறுகிறது. இல்லை: அது நாட்டை பிரிக்கும். தமிழர்களின் அன்பையும் ஆதரவையும் பெற முடியாது.

எல்டிடிஇயைத் தோற்கடித்தபின் தமிழர்களுக்கு தோசை, வடை, சாம்பார் கொடுப்போம் என்று அரசாங்கம் கூறுகிறது. தமிழர்கள் கேட்பது தோசை, வடை, சாம்பார் அல்ல. தமிழர்கள் கேட்பது சுதந்தரம், கௌரவம்.

நாங்கள் தமிழர்கள் பக்கம்

இலங்கை அரசாங்கம் அதன் போர் நடவடிக்கையில் வெகு தூரம் சென்று விட்டது. பின்வாங்கல் எதிர்மறையான விளைவுகளை உண்டுபண்ணக் கூடும். இராணுவப் புரட்சி ஏற்படக்கூடும். கம்யூனிஸ்ட் கிளர்ச்சி ஏற்படலாம். நெடுஞ்சாலையில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது யூ-டெர்ன் எடுப்பது எப்படி?

இந்தப் போரால்தான் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம காரணமான பிரபாகரனை உயிரோடு பிடித்தால் இந்தியாவிடம் ஒப்படைப்போம்; பிணமாகப் பிடித்தால் இங்கே கொண்டு வருவோம், என்பது போன்ற உணர்ச்சிகரமான பேச்சுகளால் சிங்கள மக்கள் கட்டுண்டுகிடக்கின்றனர்.

அதே நேரத்தில் சிங்கள மக்கள் இந்தப் போருக்கு பெரிய விலை கொடுக்க நேரிடும். இராணுவச் செலவினம் அதிகரித்துக் கொண்டே போகப் போகிறது. அது சிங்கள மக்களின் கண்களைத் திறக்கும்.

ஆனால், ஒரு தலைமுறைக்கு மேலாக நடந்து வரும் ஆயுதப் போராட்டம் பிரச்னையைத் தீர்க்கப்போவதில்லை.

தமிழர்களோ எல்டிடிஇனரோ சிங்கள அரசோ ஒருவரை ஒருவர் நம்புவதில்லை. ஆனால், நாம் கூட்டாக அமர்ந்து பேசி தமிழர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று சோசலிசவாதிகளாக நாங்கள் நம்புகிறோம்.

“ஆம், நாம் தமிழர்களின் உரிமைகளைத் தற்காத்து அவர்களின் பக்கம் இருக்கிறோம்.”

இப்போது நடந்து கொண்டிருக்கும் போர் தமிழர்களின் உரிமைகள் பற்றியது. இப்போரை முடிவிற்கு கொண்டுவரும் சமாதான நடவடிக்கைகளில் இலங்கையின் இடதுசாரி இயக்கம் பங்குபெற வேண்டும் என்பது சோசலிசவாதிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

நாங்கள் அழைக்கப்பட்டால் நிச்சயம் பங்கேற்போம்.

“போரை நிறுத்த வேண்டும்; பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும்”, என்று இலங்கை அதிபருக்கு கோரிக்கை விடுத்தார் ஸ்ரீதுங்கா ஜெயசூரியா.

No comments: